3047. |
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் |
|
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன்
மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 6 |
6.
பொ-ரை: இறைவன் அரிய நான்கு வேதங்களையும்
அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை
அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம்
என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும்
இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த
அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
கு-ரை:
தொகுத்தல் - பலவாய்க் கிடப்பனவற்றை ஒருமுறைப்
படுத்திச் சேர்த்தல். மறைகளையும் அங்கங்களையும் தொகுத்தவன்.
ஆகம நூற் பொருளை நந்தியெம்பெருமானுக்கு வகுத்து
உபதேசித்தவன் என்றது முந்தொரு காலத்தின் மூவுலகந்தன்னில்,
அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறி என்பது
கந்தபுராணம்; பாயிரப்படலம் 1 முதல் 39 வரையுள்ள பாடல்களால்
அறிக.
மிகுத்தவன்
- தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
மிகுத்தவர் - செருக்கு உற்றவர்களாகிய அசுரர்களின், புரங்கள்.
செகுத்தவன் அழித்தவன். மிகுத்தல்; இப்பொருட்டாதலை
மிகுதியான் மிக்கவை செய்தாரை என்ற திருக்குறளால்(158) அறிக.
|