3053. போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
  தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடு்ம் பெருந்தகை யிருந்ததே.    2

     2. பொ-ரை: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை
இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப்
பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப்
பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார்
கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை
ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற்
குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும்
வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த;
பொற்கிண்ணம். அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார்
உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம்
ஆதலால் அடிசில் எனப் பட்டது. "ஞானபோனகர்" என்று
சேக்கிழார் சுவாமிகள் வழங்குவதாலும் அறிக.