3055. அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
  நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.     4

     4. பொ-ரை: நெஞ்சமே! வினையால் இத்துன்பம் வந்தது
என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக.
(இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும்
என்பது குறிப்பு). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க,
சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு, கயல்மீன்கள்
அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர்வளமும், நிலவளமுமிக்க
திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப்
போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான்.