3060. |
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர் |
|
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 9 |
9.
பொ-ரை: நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும்,
பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய்
ஓங்கி நின்றனன். நறுமணம் கமழும் சோலைகளை உடைய
திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண்யானையின் நடைபோன்று
விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
நினைந்துருகும் தன்மையில்லாதவர்களாகிய பிரம
விட்டுணுக்களால் அறியமுடியாத அழல் உருவாய் நின்றவன்.
அரிது - இன்மைமேல் நின்றது. "மனக்கவலை மாற்றலரிது"
என்புழிப்போல. (திருக்குறள்).
|