3062. கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
  பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.  11

     10. பொ-ரை: மாலை போன்று, பாயை விரும்பி ஆடையாக
அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை
எடுத்துரைக்காது, தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால், அவற்றை
விடுத்து, இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக.
பசுமைவாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம்
என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு
பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: தார் உறுதட்டு உடைச்சமணர் - மாலையைப்போல
விரும்பி உடுத்திய பாயை உடைய சமணர். தட்டு - பாய்.
"தட்டையிடுக்கி" என்பதனாற்கொள்க "தட்டைச் சாத்திப் பிரட்டே
திரிவார்" என்பது இங்குக் காண்க. பேர் அறத்தாள் -
முப்பத்திரண்டறமும் வளர்த்தவள். அறத்தாள் - தரும சொரூபி:
அம்பிகை எனக் கொண்டு பெரிய நாயகி எனலும் ஒன்று.
பெருந்தடங்கொங்கை-அம்பிகை; அன்மொழித் தொகை,
பன்மொழித்தொடர். சம்பந்தன செந்தமிழ்; அகரம், ஆறனுருபு.
ஆகையால் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் (ப்பாசுரங்)கள் என்க.
ஒவ்வொரு பாசுரத்திலும் "பெருந்தகை எம் பெருமாட்டியுடன்
இருந்ததே என்று .... அண்ணலார் தமை வினவித் திருப்பதிகம்
அருள் செய்தார்" என்ற பெரியபுராணப் (தி.12) பாடலின்படி
எம்பெருமாட்டியுடன் பெருந்தகை (நன்கு) இருக்கிறாரா? என்று
வினவினதாக இருத்தலால் ஈற்றேகாரம் வினாப்பொருளில் வந்தது.
இதனை ஈற்றசை என்று உரைத்தாருமுளர்.