3064. வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
  ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.     2

     2. பொ-ரை: தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத
திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச்
சிவபெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது
அணியப்பட்டு அழகு தருவன. தீவினைகளைப் போக்குவன. கற்று
ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத்
தெளிவாக உணரும்படி செய்வன.

     கு-ரை: வீதிபோக்கு ஆவன-திருவீதி வலம் வருங்கால்
அணிவதற்குரிய அணிகலன்களாக அணிசெய்வன.

     போக்கு-போதல். இங்கு ஆகுபெயர்ப் பொருளை
உணர்த்திற்று. ஒரு நூலைப் படித்துப் பொருள் விளங்காதிருக்கும்
பொழுது இவ்வேடத்தை நினைத்தால் அப்பொருள் தெள்ளிதில்
விளங்கும்.