| 
         
          | 3065. | மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன |   
          |  | வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
 ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.     3
 |  
     
             3. 
        பொ-ரை: தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து
 பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும்
 சிவபெருமானின் சிவவேடங்கள், மன்னுயிர்களின் பெருமையை
 மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான
 மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன.
       கு-ரை: 
        மாசு நீக்குவன - மனத்துக்கண் மாசை நீக்குவன. வான் - வெளி -இன்பவெளி. உள்க - நினைக்க. ஆன் அஞ்சு -
 பஞ்சகவ்வியம்; அபிக்ஷேகத்திரவியங்களில் ஒன்று. "ஆனைந்தும்
 ஆடினான்காண்" என்பது அப்பர் திருவாக்கு.
 |