3069. கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்
  குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.   7

     7. பொ-ரை: அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து
தேவன்குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள
சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும். குற்றம்
என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவ்வேடங்களை நினைத்து
அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும்.
அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்.

     கு-ரை: கரைதல்-குற்றமாகச் சொல்லுதல், ஒன்றும் இல்லை.
(ஒரு பொருளென்றால் குணம் குற்றம் இரண்டும் கலந்திருக்கும்.
இவ்வேடத்தில் முழுதும் குணமேயன்றி, குற்றமென்று சொல்லுவதற்கு
ஒன்றுமில்லை) என்பதாம்.

     உரையில் ஊனம் இலை-இதன் பெருமையைச் சொன்னால்
நமக்குள்ள குறைகள் நீங்கும்(உரை+கு+இல்)=உரைக்கில் என்பதின்
'கு'ச்சாரியையின்றி வந்த செயின் என்னும் வினையெச்சம்.