3070. உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
  விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.       8

     8 .பொ-ரை: சிறந்த நந்தவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன்
குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம்,
உலகத்தைத் தனக்குக் கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது
வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ
விளங்குவது. எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள்
அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது.

     கு-ரை: இராவணனது வலியையும் பின்வாங்கத் தக்க
வலியையுடைய பூத கணங்கள், (அவ்வேடம் உடைமையால்) பிற
அஞ்சத்தக்க எப் பொருள்களையும் அடியார்மாட்டு எய்தவொட்டாது
வெருட்ட வல்ல திருவேடத்தையுடையன என்பது
முன்னிரண்டடிகளின் கருத்து.