3071. துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
  விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.   9

     9. பொ-ரை: வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய
நறுமணம் கமழும் நந்தவனச் சோலை விளங்கும் திருந்துதேவன்
குடியில், பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின்
திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன.
கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன.
அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன.

     கு-ரை: துளக்கம் இல்லாதன:-"மண்பாதலம்புக்கு மால் கடல்
மூடி மற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்ட இருசுடர்
வீழினும்"-இவ்வேடம் புனைந்தவர்க்கு நடுக்கம் இல்லை. தூய
தோற்றத்தன-கண்டவர் மனத்தையும் தூய்மை செய்யும்
தோற்றத்தையுடையவை. விளக்கம் ஆக்குவன-மனத்தில்
விளங்காமலிருக்கும் பொருள்கள் இவ்வேடத்தைக் கண்டால்
விளங்கும். ஆக்குவன்-வகரம் விரித்தல் விகாரம். வெறி-வாசனை.
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள்- "இன்ன தன்மையனென்று
அறிவொண்ணா இறைவன்" என்றது சுந்தரமூர்த்திகள் தேவாரம்.