3076. வாவியாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
  காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.   3

     3. பொ-ரை: பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில்
தங்கித்தேனைப் பருகிய வண்டினம், இரவில் அப்போது மலரும்
நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க
விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
இறைவனை, கஸ்தூரி என்னும் மான், புழுகுப்பூனை இவற்றிலிருந்து
பெறப்படும் வாசனைப்பொருள், சந்தனம், புனித நீர் முதலியன
கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி, மலர்தூவி அர்ச்சித்துப்
போற்றி வழிபடுபவர்.

     கு-ரை: குளத்தில் தாமரையில் தங்கிய வண்டின் கூட்டங்கள்
மாலைக் காலத்தில் அது குவிவதால் அப்போது மலர்வதாகிய
நீலோற்பலத்தை அடைந்து அங்கே தேனுண்ட மகிழ்ச்சியினால்
பாடும் கானப்பேர். நீலோற்பலம் இரவின் மலர்வதென்பதை அறிக.
நாவிவாய்...தொண்டர் புழுகு பூனையின் இடத்து உண்டாகும்
புழுகிலும் மலர்களிலும். ஞானநீர்தூவி - திரவிய சுத்தியின்
பொருட்டு அஸ்திரமந்திரத்தால் நீர் தெளித்து, வாய்ப்பெய்து
-அத்திரவியங்களை அபிடேக கலயத்தில் வார்த்துக்கொண்டு
நின்று (ஆட்டுவார்) வாய் - இங்குப் பாத்திரத்தின் இடத்தைக்
குறித்து. கிரியையெல்லாம் அறிவோடு கூடிய வழியே பெரும்பயன்
விளைப்பதால் அவ்வொப்புமைபற்றிக் கிரியையை ஞானமெனக்
கூறினார். ஞானம் கிடைத்தற்கு நிமித்தம், கிரியை ஆதலின் ஞானம்
என்றார்.