3078. ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
  ஞானப்பே ராயிரம் பேரினா னண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே.     5

     5. பொ-ரை: பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த
மார்பின்மேல், எலும்புமாலையும் அணிந்து, அழிவில்லாத சிவஞானம்
தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும்
திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர்
ஆவர். தேவர்களின் நகரமான அமராவதியை அடையும்
சிறப்புடையவர் ஆவர்.

     கு-ரை: ஏனம் - பன்றியின் கொம்பாகிய. பூண் -
அணிகலத்தையுடைய, மார்பினில், என்பு பூண்டு - எலும்பு
மாலைகளையணிந்து. ஞானம் - சிவபோதம்தருவன ஆகிய.
பேர்ஆயிரம் - சிறந்த ஆயிரம் பெயர்களும். பெயரன் - பெயராக
உடையவன். "பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்"
(அப்பர்) "ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே”
(சுந்தரமூர்த்திகள்) "ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ"
(தி.8 திருவாசகம்) எனவருவனவும் அறிக. ஆயிரம் என்பது மிகப்
பல என்னும் பொருட்டு "பழுதெண்ணு...எழுபது கோடியுறும்" என்ற
திருக்குறளிற்போல. (639)