3081. வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
  தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.   8

     8. பொ-ரை: வாட்போர் வலியாலும், வேற்படைப்
பயிற்சியாலும், பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த
தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு,
பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத்
தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு
நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள்.

     கு-ரை: வாளினால் - வாட்போர் வலியாலும். வேலினால் -
வேற்படைப் பயிற்சியாலும், வரை எடுத்த தோளினான். நாளும்
நாளும் உயர்வதோர் நன்மை அவனை வணங்குவார்க்கன்றிப்
பிறர்க்குச் செய்தலாகாமையறிக.