3082. |
சிலையினான் முப்புரந் தீயெழச் செற்றவன் |
|
நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவிற்றேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே. 9 |
9.
பொ-ரை: மேருமலையை வில்லாகக் கொண்டு
முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான்,
நிலையிலா பிரமன், திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு
அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான்.
அழகிய குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த நிலமான, தேன் மணம்
கமழத் திகழும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது
போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர்.
கு-ரை:
செற்றவன் - அழித்தவன். நிலைமைகண்டு ஓங்கினான்
- செருக்கு ஒழியாத நிமையைக்கண்டு, அழலாய் ஓங்கினவன்;
இறைவன் அவ்வாறு ஓங்காவிடின், அவர்களின்றும் செருக்கு
ஒழிந்திரார். "தாளை வணங்காத்தலை" (திருக்குறள்) "வணங்கத்
தலைவைத்து" (தி.8 திருவாசகம்) "தலையே நீ வணங்காய்" (அப்பர்)
என்பதனால் தலையினால் வணங்குவார் என்றார். இருவரை
நிலைமையை; இரண்டு செயப்படுபொருள் வருவதால் இருவரை
என்பதற்கு, இருவரது என்க.
|