3091. |
பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம் |
|
பேரினார்
பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 7 |
7.
பொ-ரை: சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம்
தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை
உடையவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக்
கொண்டவர். பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச்
சடைமுடியில் தாங்கியவர். கொத்தாக மலரும் கொன்றை மலர்களை
அழகிய மாலையாக அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தரும்
வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
கு-ரை:
பாரினார்-பூமியிலுள்ளோர். தொழுது
எழும்-துதித்தற்குரிய பல ஆயிரம் பெயரை உடையவர், எழும்
என்ற பெயரெச்சம் (பெயரை) உடையவர் எழும் என்ற பெயரைத்
தழுவும். பரவு பெயர்; வினைத் தொகை. பல்லாயிரம்-
இடைப்பிறவரல். நிரை-வரிசை. அடுக்கு அடுக்காகப் பூத்தலினால்
கொன்றைமலர் நிரைமலர் எனப்பட்டது.
|