3092. |
முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள் |
|
எதிரிலா
முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே. 8 |
8.
பொ-ரை: முதிர்வு அடையாத இள வெண்திங்களைச்
சிவபெருமான் சடைமுடியில் சூடியவர். முன்பொருநாள் தம்மை
எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை
என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச்
சாம்பலாகுமாறு செய்தவர். கயிலைமலையினால் வல்லசுரனான
இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும்.
கு-ரை:முதிர்,
அதிர்-என்பன முதிர்தல், அதிர்தல் என்ற
பொருளில் வருதலால் முதனிலைத் தொழிற்பெயர். வரை தன்
ஆல்-தன்-அசை. சதிர்-திறமை.
|