3093. துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
  பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.         9

     9. பொ-ரை: கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ
பெருமான் அணிந்தவர், மணம் கமழும் திருவெண்ணீற்றினைப்
பூசியவர். பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர். குளிர்ந்த
சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். திருமாலும், பிரமனும்
தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி
என்பதாகும்.

     கு-ரை: துணி படு-கிழிக்கப்பட்ட, பணி-பாம்பு. மணி-நீலமணி.
தணிவினர்-செருக்கத்தணியச் செய்தவர்.