3094. உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள்
  விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.         10

     10. பொ-ரை: உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று
சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும், உண்பதையே
தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று
கொடுமையானவை. மெய்ம்மையானவை அல்ல. அவற்றைப்
பொருளாகக் கொள்ளவேண்டா. விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு
அபிடேகம் செய்தும், மலர் மாலைகளைச் சார்த்தியும், குளிர்ந்த
குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப்
பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும்
வணங்குவீர்களாக!

     கு-ரை: உடம்பைப் போர்க்கும் சீவர மென்னும்
ஆடையையுடைய புத்தர். விடம்-நஞ்சு. புனல்
கொடு-நீரைக்கொண்டும்; வடம்படு மலர் காடு - மலர்
மாலைகளைக்கொண்டும்.