3096. காலையார் வண்டினங் கிண்டிய காருறும்
  சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.           1

     1. பொ-ரை: காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை
இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய, மரங்கள்
மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள்
அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில், சொல்லையும்,
பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில்
மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான்
விரும்பி வீற்றிந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற
திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: காலை - மருதப்பண்ணை. காலை - காலைப்பண்;
ஆகுபெயர். ஆர் -பாடிய (ஆர்த்தல்-ஒலித்தல்) வண்டினம்.
கிண்டிய - தம்கால்களால் கிளர்ந்த, (மலர்களையுடையசோலை).
கார் உறும் - மேகம்தங்கும். சோலை - சோலையிற் பொருந்திய,
பசியகிளிகள் அத்தலத்தினர் பயிலும் சைவ நூல்களின் சொல்லையும்
பொருளையும் பயில, வேதியன் விரும்பும் இடம் மழபாடியென்க.
பயில - என்பது காரண காரியம் ஒன்றும் இன்றி வந்த
வினையெச்சம். “வாவி
செங்கமலம் முகங்காட்ட.........குவளைக்
கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே.” என்பதில் காட்ட
என்புழிப்போல. (தி.1 பதி.129)

     கார் - பண்பாகுபெயர். பைங்கிளி சொற்பொருள் பயில
என்பதனை “வேரிமலிபொழிற் கிள்ளை வேதங்கள் பொருட்
சொல்லும் மிழலையாமே” என்பதனோடு ஒப்பிடுக. மாடங்களில்
சந்திரன் தவழும் மழபாடி என்க. விடம் அணி வேதியன் -
விடக் கறையைக் கழுத்திலணிந்த வேதத்தின் பொருளானவன்.
விடம் காரண ஆகுபெயர்.