3097. கறையணி மிடறுஉடைக் கண்ணுதல் நண்ணிய
  பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும்ஊர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.         2

     2. பொ-ரை: நீலகண்டராயும், நெற்றிக்கண்ணை உடையவரும்
தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய
செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை
ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும் ஊர், நீர்த்துறைகளிலே
வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற
மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும்
திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கண்ணுதலும் பிஞ்ஞகனுமாகிய இறைவன்.
பேணும்-விரும்பும்.(ஊர்). நண்ணிய பிறை-தன்னைச் சரண்
அடைந்தபிறை. பிஞ்ஞகம்-மயில் தோகை; வேட உருத்தாங்கிய
போது தரித்தலால் பிஞ்ஞகன் என்று சிவபெருமானுக்குப் பெயர்.
நீர்த்துறைகளிலே வெள்ளிய பறவைகள் அங்கு மலர்ந்த
வெண்மலர்களுக்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி
நெருங்கியுள்ள வளம்பொருந்திய மழபாடி என்பது மூன்றாம்
அடிக்குப் பொருள். (துதைய-) பொருந்திய என ஒரு சொல்
வருவிக்க.