3103. கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கன
  சிரத்தினை ஊன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.          8

     8. பொ-ரை: தன் கையால் கயிலைமலையைப்
பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள்
அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம்காற்பேருவிரலைச்
சிவபெருமான் ஊன்றியவர். பின் இராவணன் சிவன் திருவடியையே
சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித்
தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட,
அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: அரக்கன சிரம் - அரக்கனுடைய தலைகள்.
வருமொழி பன்மையாதலினால் ஆறனுருபில் அகரம் வந்தது.
அதனால் சிரம் என்பதைப் பால் பகா அஃறிணைப் பெயராகக்
கொள்க. இரத்து - இரத்தல். கெஞ்சி வேண்டல், து - தொழிற்
பெயர் விகுதி, பாய்த்து என்பதிற்போல. வரத்தினான்-வரத்தைத்
தந்தவன். பாடலும், அவனுக்கு அரளிய வரத்தையுடையவன் (வரன்
அருளியவன்) என்பது.