3105. |
உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர் |
|
நெறிபிடித்
தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே. 10 |
10.
பொ-ரை: நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப்
பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும், வாய் கழுவும் வழக்கமில்லாத
சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும்
சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா. படமெடுத்தாடும்,
புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து, இள
மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் விற்றிருந்தருளும்
இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
கு-ரை:உறி
பிடித்து:-நீர்க்கரத்தில் எறும்பு விழுந்து கொலைப்
பாவம் சேராதிருக்க அதனை ஓர் உறியில் வைத்து அவ்வுறியை
ஒரு பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்வது சமணர் வழக்கம். ஊத்தை
வாய் - ஊற்றை வாய், பல விளக்கினால் அதில் இருக்கும் சிறு
கிருமிகள் எனப்பட்டது. பொறி பிடித்த அரவு இனம் - படத்திற்
புள்ளிகளையுடைய பாம்பு. பிடித்த அரவு; பெயரெச்சத்து விகுதி
அகரம் தொக்கது.
|