3108. |
நிருத்தனார்
நீள்சடை மதியொடு பாம்பணி |
|
கருத்தனார்
கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான் திருநடனம் செய்பவர். நீண்ட
சடைமுடியில் சந்திரனோடு பாம்பை ஆபரணமாக அணிந்தவர்.
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும்
திருத்தலத்தில் கண்ணாற்காணும் பொருள்வடிவாயும் விளங்குபவர்.
அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக்
கொண்டுள்ள அப்பெருமானின் திருவடிகளைப் போற்றி
வணங்குதலே பயனுடைய செய்கையாகும்.
கு-ரை:
அருத்தனார் - பொருளாய் உள்ளவர். அறிவாற்
காணும் கருத்துப் பொருளாய் இருத்தலன்றித் திருக்காட்டுப்பள்ளியிற்
கண்ணாற்காணும் பொருள் வடிவாயுமுள்ளவர். பொருத்தனார் -
பொருந்துதலையுடையவர். பொருத்தம் -பொருந்தல். அதை
யுடையவன் பொருத்தன், கழலிணை போற்றுதல், பொருளது -
பயனுடைய செய்கையாகும். ஏனைய அவம் உடையனவே என்பது
குறிப்பெச்சம். பொருள் என்னும் பல பொருள் ஒருசொல் ஈற்றடியில்
பயன் என்னும் பொருளில் வந்தது. போற்றுதல் பொருளதே என்ற
தொடரில் பிரிநிலை யேகாரத்தைப் பிரித்துப் போற்றுதலே
பொருளது எனக்கூட்டுக.
|