3112. வேதனார் வெண்மழு வேந்தினார் அங்கமுன்
  ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே.       6

     6. பொ-ரை: வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும்
விளங்குபவர் சிவபெருமான். வெண்ணிற மழுப்படையை ஏந்தியவர்.
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். ஒளி
பொருந்திய குழையணிந்த காதை உடையவர். நறுமணம் கமழும்
சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் தலைவரான அப்பெருமானின் திருவடிகளைத்
தினந்தோறும் போற்றி வழிபடுவீர்களாக!

     கு-ரை: ஏத்தும் - துதியுங்கள். உம் ஏவற் பன்மை விகுதி.