3113. மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
  கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லல்ஒன் றில்லையே.     7

     7. பொ-ரை: மை போன்ற கரிய கண்டத்தையுடைய சிவ
பெருமான் மானையும், மழுவையும் ஏந்திய கையினார், நறுமணம்
கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும்
திருத்தலத்தில் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டு குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிய தலைவரான
சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றத் துன்பம் சிறிதும்
இல்லை.

     கு-ரை: மையின் ஆர் மிடறனார்-கருமை நிறைந்த
கழுத்தையுடையவர். கடி-வாசனை.