3116. போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
  வாதினால் உரையவை மெய்யல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே.   10

     10. பொ-ரை: அரச மரத்தினடியில் ஞானம் பெற்ற புத்தரின்
வழிவந்த புத்தர்களும், அசோகமர நிழலில் அமரும் அருகக்
கடவுளை வணங்கும் சமணர்களும், தங்கள் வாதத்தால் உரைப்பவை
மெய்ம்மை யானவை அல்ல, மேகம் தவழும், நறுமணம் கமழும்
சாலைகள் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் இறைவனை நாள்தோறும் சீலத்தால் தொழுது பாற்ற
இன்பம் வந்தடையும்.

     கு-ரை: போதி-அரசமரம். கௌதம புத்தர் அம்மரத்தினடியில்
இருந்து ஞானம் அடைந்தமைபற்றி அதனைப் போற்றுவர் புத்தர்.
பிண்டி - அசோகு. அருகக்கடவுள் அம்மர நிழலில் உளன் என்பர்
சமணர்.

     வாதினால் உரை அவை - வாதினால் உரைக்கும்
அச்சொற்கள். ஏர் - அழகு; சிவவேடம். இப்பாடல் குறிலெதுகை.