3121. மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
  மூவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.    4

     4. பொ-ரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற
ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர். வேதத்தின் உண்மைப்
பொருளை விரித்து ஓதுபவர். மெய்ப்பொருளாகியவர். பண்ணோடு
கூடிய பாடலில் விளங்குபவர். உமாதேவியைத் தம் திருமேனியில்
ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானார் கோயில்
கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே.

     கு-ரை: பஞ்சபூத சொரூபியாய் இருப்பார் என்பது
முற்பகுதியின் பொருள். வேதம் மெய்ப்பொருள் விரித்து
ஓதுவார்-வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுவார்,
என்றது வேதத்துக்குப் பொருளருளிச் செய்த (திருவிளையாடற்
புராண) வரலாறு. பண்-இசை.