3126. வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
  ப எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     9

     9. பொ-ரை: வரிகளையுடைய பாம்பு, எலும்பு ஆகியவற்றை
ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர். கங்கையைத் தாங்கிய
நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர்.
கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய
பெருமையுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது
திருஅரதைப் பெரும்பாழியே.

     கு-ரை: வரி அரா-கோடுகளை உடைய பாம்பு.
மல்கும்-நிறைந்துள்ள. எரியராவுஞ்சடை-நெருப்புப்போன்ற
நிறமுடைய செஞ்சடை.