3128. நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
  பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.   11

     11. பொ-ரை: கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய
நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப்
பூவுலகத்தோரால் போற்றி வணங்கப்படும் திரு அரதைப்
பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத
வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: நீரின்ஆர் - நீரினால் நிறைந்த. ஏரின் ஆர் -
அழகால் நிறைந்த. தமிழ்வ(ல்)லார்க்கு இல்லையாம் பாவமே.