3133. நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
  சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.       5

     5. பொ-ரை: இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால்
ஏந்தி வருதல் போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது
அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள்
வீற்றிருந்தருளும் இறைவனும், மை போன்று கருநிறம் கொண்ட
கழுத்தையுடையவனும், கையில் மழு என்னும் ஆயுதத்தை
ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை
வணங்குவீர்களாக.

     கு-ரை: நித்திலத்தொகை - முத்துக்குவியல் பல. நிரைதரு -
வரிசையாகப் பொருந்திய. மலர் என-மலர்களைப்போல. சித்திரம்
- விதம் விதமான. புணரி - அலைகளில். சேர்த்திட - சேர்க்க.

     கடலானது, இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால்
ஏந்தி வருதல் போல முத்துக்குவியலை அலையினால் அடித்து
வருகிறது என்பது முன் னிரண்டடிகளின் கருத்து.

     கைத்தலம் மழுவன் - கையினிடத்து மழுவை ஏந்தியவன்.