3138. உடைதுறந் தவர்களு முடைதுவ ருடையரும்
  படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை யீசனை யிணையடி பணிமினே.         10

     10. பொ-ரை: ஆடையினைத் துறந்தவர்களாகிய
சமணர்களும், மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க
பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக. மடையின்
மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய
மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
திருவடிகளை வணங்குவீர்களாக.

     கு-ரை: உடை துறந்தவர் - சமணர். உடைதுவர் உடையவர்
- மருதந்துவரினால் தோய்த்த காவி உடையையுடைய புத்தர். துவர்
- இங்கு மருதந்துவர் மஞ்சட்காவியை யுணர்த்திற்று. மயேந்திரப்
பள்ளியுள்; இடம் உடை - தனக்கு இடமாக உறைதலையுடைய
முடை - தீ நாற்றம்.