3139. வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
  நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினா னவில்பவர்
உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.   11

     11. பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய
அழகிய திருமயேந்திரப் பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும்
சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி
ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை 'இது நம்முடைய
கடமை' என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள்
தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை
அடைவார்கள்.

     கு-ரை: நம்பரம் - நமது கடமை. பரம் - பாரம். வம்பு
- மணம். உம்பர் + ஆர் = தேவர்.