3142. குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
  வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூ ரேடகம்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே.    3

      3. பொ-ரை: காதில் இரு கந்தருவர்களைக் குண்டலமாகக்
கொண்டு விளங்கும் அழகராய், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை
மலரையும், வானில் விளங்கும் சந்திரனையும் சடைமுடியில்
அணிந்து, மணியோசை ஒலிக்க வீரநடை போடும் இடபவாகனத்தின்
மீது வீற்றிருந்தருளும் மேன்மையுடையவரான சிவபெருமானின் ஊர்
திருவேடகமாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்துக் கைகூப்பி
வணங்கிப் போற்ற, மனக்கவலையால் வரும் நோய் நீங்கும்.

     கு-ரை: செண்டு-வட்டமாகச் சுற்றிவரும் சாரிநடை.
அலம்பும் விடை - அணிந்த மணியோசை முதலியவற்றால்
ஒலிக்கும் விடை. சேடன் - மேன்மையுடையவன். கவலை - நோய்;
பலவழியால் வருந்துன்பம்.