3143. ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
  கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே.        4

     4. பொ-ரை: மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய
உமாதேவியோடு, அழகிய இடபவாகனத்தில் ஏறும் அழகனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமான ஆல், மாதவி, சந்தனம்,
செண்பகம் முதலியன மிகுந்து விளங்கும் சிறப்புடைய திருவேடகம்
சென்று அவனை வழிபட்டால் செல்வம் பெருகும்.

     கு-ரை: ஏலம் - மயிர்ச்சாந்து. எழில் பெறும் - அழகு
உடைய. கோலம் - தோற்றம். சாலம் - ஆலமரம், சேர்தலாம்
செல்வம் - சேர்தல் செல்வம் ஆம், என மாறிக்கூட்டுக.