| 
         
          | 3150. | நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான் |   
          |  | போருடைச் 
            சுக்கிரீ வன்அநு மான்றொழக் காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
 சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.        1
 |  
             1. 
        பொ-ரை: பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன்,
 அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு
 காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும்
 தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
 திருவுசாத்தானம் ஆகும்.
       கு-ரை: 
        நீரிடைத்துயின்றவன் - இராமன். பாற்கடலில் துயிலும் திருமாலிடம் வானவர், அரக்கர் தந்த துயரை முறையிட,
 இராமனாகப் பிறந்தமை குறித்து 'இராமனை நீரிடைத் துயின்றவன்'
 என்றார். நீர்; கடலை ஆகு பெயராற் குறிக்கப் பொதுப்பெயர்
 சிறப்புப் பெயராய்ப் பாற்கடலைக் குறித்தது. அனுமன் தொழச்
 சேடர்வாழ் திருவுசாத்தானம் என்க. சேடர் வாழ் - வாழ்த்தல்;
 வாழ்த்துவது என்னும் பொருளாதலின் வாழ் முதனிலைத்
 தொழிற்பெயர்.
 |