3154. பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள்
  தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக்
கொண்டிரைக் கொடியொடுங் குருகினி னல்லினம்
தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.     7

     7. பொ-ரை: பண்டைக்காலம் முதல் மகிழ்ச்சியால்
ஆரவாரித்துப் பிரமனும், திருமாலும், மற்றுமுள்ள பல பக்தர்களும்
அடிமைத் திறத்தினால் மலர்களைத் தூவித் தோத்திரம் சொல்லி
வழி பட, இறைவன் வீற்றிருந்தருளுவது, மீன் முதலிய இரைகளைக்
கவரும் காக்கையோடு, நல்ல பறவை இனங்கள் தங்குகின்ற,
நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருவுசாத்தானம் ஆகும்.

     கு-ரை: பண்டு - தொன்றுதொட்டு. இரைத்து - மகிழ்ச்சியால்
ஆரவாரித்து. தொண்டு-அடிமைத்திறத்தினால். “மந்திரத்தைப் பிறர்
காதிற் படாதவாறு உச்சரிக்க; தோத்திரம் பிறரும் கேட்குமாறு
ஓசையோடும் பாடுக” என்பது ஆகம வசனக் கருத்து என்ப.
கொண்ட இரை - மீன் முதலிய இரைகளைக் கவர்ந்த.
கொடியொடும்-காக்கையோடும். குருகினில் நல் இனம்-பறவைகளில்
நல்ல சாதிக் கூட்டங்கள்

     தெண்திரை கழனி சூழ்-தெளிவாகிய அலைகளையுடைய
கழனி சூழ்ந்த (திருவுசாத்தானம்) கொண்ட + இரை = பெயரெச்ச
விகுதி தொகுத்தல் விகாரம். அது “அறு கானிறை மலரைம்
பானிறை யணிந்தேனணங்கே” என்ற திருக்கோவையாரிற் போல.