3155. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது
  சடசட வெடுத்தவன் தலைபத்து நெரிதர
அடர்தர வூன்றியங் கேயவற் கருள்செய்தான்
திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே.       8

     8. பொ-ரை: உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டு விளங்கும் இறைவன், கயிலைமலையை மதியாது
பெயர்த்தெடுத்த இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி தன்
காற்பெருவிரலை ஊன்றி அம்மலையின்கீழ் அவனை அடர்த்து,
பின்னர் இராவணன் தன் தவறுணர்ந்து வழிபட அவனுக்கு அருள்
செய்தவன். அப்பெருமான் உறுதியாக வீற்றிருந்தருளும் இடம்
திருவுசாத்தானம் ஆகும்.

     கு-ரை: மடவரல் - (என்றும்) இளமைத் தன்மையையுடைய
அம்பிகை. திடம் என - ஏனைத் தலங்களிலும் இஃது உறுதியை
உடையதாக.