3156. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும்
  காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம்
சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே.       9

     9. பொ-ரை: இறைவர் ஆணுமல்லர். பெண்ணுமல்லர்.
பிரமனும், திருமாலும் காணொணாத வண்ணம் விளங்குபவர்.
தம்மை நினைந்து வழிபடும் அன்பர்களின் மனத்தில்
நிறைந்துள்ளவர். தம்மை வழிபடும் அடியவர்களின் உடல்நோயை
நீக்குவதோடு பிறவி நோயையும் தீர்ப்பவர். அப்பெருமானார்
வீற்றிருந்தருளும் இடம் ஆகாயமளாவிய மாளிகைகள் உடைய
திருவுசாத்தானம் ஆகும்.

     கு-ரை: பிணியொடும் பிறப்பு அறுப்பான் - மலமாயை
கன்மங்களோடும் பிறப்பை அறுப்பவன். சேண் - ஆகாயம்.