3158. |
வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன் |
|
திரைதிரிந் தெறிகடற் றிருவுசாத் தானரை
உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ் வல்லார்
நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே. 11 |
11.
பொ-ரை: மலையிலிருந்து தன் தன்மை மாறுபட்டுப்
பாயும் காவிரியின் நீர் வளமும், வயல் வளமும் மிகுந்த புகலியில்
அவதரித்த ஞானசம்பந்தன், அலைவீசுகின்ற கடலையுடைய
திருவுசாத்தானத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை உணர்ந்து
போற்றிய இந்த ஒண் தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நரை,
திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை
மிடுக்குடன் வாழ்ந்து சிவஞான நெறியில் நிற்பர்.
கு-ரை:
வரை - சையமலையினின்றும். திரிந்து - தான்
அடுத்த நிலத்தின் இயல்பால் தன்மை மாறுபட்டு. இழிதரு - இறங்கி
வருகின்ற. நீர் - காவிரி நீரினால். வளவயல் - வளம் படைத்த
வயல்களை உடைய; புகலி. திரை -அலை. திரிந்து -
ஒன்றோடொன்று மாறுபட்டு. எறி - வீசுகின்ற; கடல். உரைதெரிந்து
- உரைக்கும் முறைதெரிந்து. (உரைத்து) உணரும் சம்பந்தன் தமிழ்
வல்லார். நன்னெறி - ஞானநெறி. சன்மார்க்கம்.
|