3159. |
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட |
|
அண்ணலா
ராயிழை யாளொடு மமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே. 1 |
1.
பொ-ரை: பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள்
வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த
உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது,
வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த
திண்மையான முல்லைநிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம்
ஆகும்.
கு-ரை:
திண்ணில் ஆர் - பிருதிவியின் தன்மையாகிய
திண்மையில் பொருந்திய. புறவு - முல்லை நிலத்தை. அணி -
அணிந்த; சூழ உடைய திருமுதுகுன்றம். மண் கடினமாய்த்
தரிக்கும் (உண்மை விளக்கம். பா.10.) என்பதால் திண்ணில் ஆர்
புறவு எனப்பட்டது.
|