3161. ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை
  கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.        3

     3. பொ-ரை: இறைவன், இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள்
தொழுது போற்ற, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக்
கொண்டு, கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக
அணிந்து, திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நிறைந்த
கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது,
தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த
அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: உமைகூறனார் - மாதுபாதியார். நீறனார் - திருநீறு
அணிந்தவர்.