3164. கானமார் கரியினீ ருரிவையார் பெரியதோர்
  வானமார் மதியினோ டரவர்தா மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடும்
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.       6

     6. பொ-ரை: காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப்
போர்வையாகப் போர்த்திய இறைவன், அகன்ற வானத்தில் தவழும்
சந்திரனையும், பாம்பையும் அணிந்து, உயிர்களைப் பற்றியுள்ள
குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து, அருளும்
பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது, தேன்
துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: பெரியதோர் வானம் - பெரியதாகிய வானம். ஓர் -
அசை. அரவர் - அரவை யணிந்தவர்.