3165. மஞ்சர்தா மலர்கொடு வானவர் வணங்கிட
  வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலா ளுமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயிறருந் திருமுது குன்றமே.      7

     7. பொ-ரை: வலிமை மிகந்தவராகிய சிவபெருமானைத்
தேவர்கள் மலர்தூவிப் போற்றி வணங்க, கொடுந்தொழில் செய்யும்
வேடர்களும், பிற ஆடவர்களும் விரும்பித் தொழ, அழகிய
இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும்
இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும், பக்திப்
பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: மஞ்சர் - சிவபெருமான். மைத்து - வலிமை.
வலிமையுடையவர் மைந்தர்; அது போலியாய் மஞ்சர் என ஆயிற்று.
“மஞ்சா போற்றி மணாளாபோற்றி” (தி.8 திருவா.பா.4 அடி. 183)
செஞ்சொல் - நேரே பொருளுணர்த்தும் சொல். (குறிப்பிற்
பொருளுணர்த்தல் முதலியன வியங்கியச் சொல்) கலைச்
செஞ்சொலார் (விருத்தாசல புராணம்).