3167. ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
  பாடினார் பலபுகழ்ப் பரமனா ரிணையடி
ஏடினார் மலர்மிசை யயனுமா லிருவரும்
தேடினா ரறிவொணார் திருமுது குன்றமே.       9

     9. பொ-ரை: இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர்.
அரிய வேதங்களை அருளி, அவற்றின் உட்பொருளை
விரித்தோதியவர். எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம்
திருவடிகளை இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் தேடியும் அறியப்படவொண்ணாதவர்.
அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும்.

     கு-ரை: கானகத்து ஆடினார். பொருளைப் பாடினார்.
புகழையுடைய பரமனார். ஏடின் - இதழ்களால். ஒணார் - ஒன்றைக்
கிடைக்காதவர்.