3174. வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
  அருந்தியா ரமுதவர்க் கருள்செய்தா னமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.   5

     5. பொ-ரை: திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய
நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென
வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி
அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
நகர், செருந்தி, மாதவி, செண்பகம் இவை மிகுதியாக வளரும்
நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும்.

     கு-ரை: வந்துஅடைய - வந்து சரண்புக. தான் நஞ்சு அருந்தி
அரிய அமிர்தத்தை அவர்களுக்கு அருள்செய்தவன் என, அவன்
பெருங்கருணைத்திறம் வியந்தவாறு. மாதவிக்கொடி பந்தல் போலப்
படர்தலால், மாதவிப்பந்தல் என்றே கூறப்படும். மாதவிமரம்
என்றலும் உண்டு. திருந்து நீள் என்றது பொழிலொடும் சேரும்.