3180. தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
  கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.    11

     11. பொ-ரை: தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள்
சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி, கடற்கரையின்கண்
அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில்
அவதரித்த, சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய
இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: கானல் ஆர் - கடற்கரையின் கண்ணே பொருந்திய.
கடி பொழில் - வாசனையையுடைய பொழில் சூழ்ந்த காழி. பால்நல்
ஆர் மொழி - பால்போலும் நன்மை பயக்கும் மொழியாலாகிய.
மாலை வல்லார்க்குப் பாவம் இல்லையாம்.