3184. கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
  அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கடாம் விண்ணுல காள்வரே.     4

     4. பொ-ரை: கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி
ஆகியவற்றை விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின்
கரையில், அழகிய பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி
வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள்
விண்ணுலகை ஆள்வார்கள்.

     கு-ரை: கரும்பு தேன்கட்டி - கரும்பில் தொடுத்த இறாலின்
தேனும், கரும்பு (சுடு) கட்டியும், அரும்பும் - விளைவிக்கும்.
நீர்வளம் உடைய முகலி அரும்பும். பிறவினை விகுதி தொக்கு
நின்றது.