3189. அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்
  சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே.     11

     11. பொ-ரை: அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில்
வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி,
வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு
வேதங்களையும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய
இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: அட்டமாசித்திகளாவன; அணிமா - சிறியதிற்
சிறிதாதல், மகிமா - பெரியதிற் பெரிதாதல் அண்டங்களெல்லாம்
அணு ஆதல், அணுக்கள் எல்லாம் அண்டங்கள் ஆதல்
(திருவிளையாடற் புராணம்). லகிமா - மிகத் திண்ணியபொருளை மிக
நொய்ய பொருளாக்குதல். கரிமா - மிக நொய்ய பொருளை மிகத்
திண்ணிய பொருளாக்குதல். பிராத்தி - பாதாளத்திலிருப்பவன்;
அடுத்த நிமிடம் வானுலகிலும் காணப்படுதல். பிராகாமியம் -
பரகாயப் பிரவேசம். (வேற்று உடலில் புகுதல். இருந்த
இடத்திலிருந்தே எண்ணிய போகமெல்லாம் அடைதல்).
ஈசத்துவம் - சிவபெருமானைப்போல முத்தொழிலையும் செய்து நாள்
கோள் முதலியவை தம் ஏவல் கேட்ப இருப்பது. வசித்துவம் -
அனைத்துயிரும் அனைத்துலகும் தன் வசமாகச் செய்தல்.
கோளில் ... எண்குணத்தான் என்ற தொடருக்குப் பிறர் கருத்தாகப்
பரிமேலழகர் இவற்றையும் காட்டினர். இச்சித்திகள் இன்றும்
இத்தலத்துக் காணலாகும் என்பர். சிட்டம் - முறைமை, ஒழுக்கம்.