3190. கரமுனம்மல ராற்புனன்மலர்
       தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி
     பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம்
     மையனாடொறு மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை
     பிஞ்ஞகன்னருள் பேணியே.             1

     1. பொ-ரை: யாவர்க்கும் மேலான பொருளான
சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது.
பக்தர்களும், சித்தர்களும் போற்றி வணங்க, அவர்கள் வேண்டும்
வரங்களை நல்கி அருள் செய்யவல்ல என் தலைவன் நாள்தோறும்
விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய
திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப்
போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து,
மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக.

     கு-ரை: கரம் முனம் மலரால்:- கரமலர், முனமலர்,
கைம்மலராலும், மனமலராலும். முனம் - முன்னம் - கருத்து. புனல்
மலர் தூவி - நீரையும் பூவையும் தூவி. கலந்து - முக்கரணமும்
ஒன்றுபட்டு. பலபேரினால் - பன்னிரண்டு திருப்பெயரோடு.
பொலியும் சீர்ப் பிரமனூர் எனக்கொள்க. ஆல், ஒடுப்பொருளில்
வந்தது. “தூங்கு கையானோங்குநடைய” (புறம். 22) “முன்ன -
நினைத்தளவில், வரம் அருள் செய்யவல்ல ஐயன் பிஞ்ஞகன்
அருள் பேணி ஏத்துமின்”.