3194. வாயிடைம்மறை யோதிமங்கையர்
       வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்மெரி கானிடைப்புரி
     நாடகம்மினி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர
     மாபுரத்துறை பிஞ்ஞகன்
றாயிடைப்பொரு டந்தையாகுமென்
     றோதுவார்க்கரு டன்மையே.        5

     5. பொ-ரை: இறைவன் தன் திருவாயால் வேதங்களை
அருளிச் செய்தவன். தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து
பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று, சுடுகாட்டையே அரங்கமாக்
கொண்டு நடனம் ஆடுபவன். பேய்க் கணங்களுடன் கூடி
வாழ்பவன். திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற
பிஞ்ஞகனாகச் சிவபெருமானே, பெற்ற தாயும், தந்தையும்,
மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை
உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன்.

     கு-ரை: போய்ப்போய் - அடுக்கு, பன்மைப்பொருட்டு;
பலகாலும் போய் என்று பொருள். இடம் - நாடகமாடும் இடமான,
எரிகான், இடை - ஏழனுருபு. தாயும், இடைக்காலத்தில் வந்துசேரும்
பொருளும், தந்தையும் ஆவான் என்று ஓதுவார்கட்கு அருள்தன்மை
அத்தகையதாயிருந்தது என்பது ஈற்றடியின் பொருள்.